Wednesday, September 29, 2010

சாகும் வரம்

நீ நடக்கையில்,
உன் ஒவ்வொரு அடிக்குமே -
என் மனசு
தாளம் போடுகிறது

ஓடி வந்து
என்னை  கட்டி அணைத்துகொள்...

என் இதயமும்
இன்பத்தில்,
வேகமாய் துடித்து 
நின்று போகட்டும்...

அஃது மோட்சம் கிடைக்கட்டும்

Wednesday, September 22, 2010

ஒரு நாள் ஒரு பொழுது

கண் இமைகளில்
மெல்லிய முத்தம்
தந்து, தலைக்கோதி,
துயில் எழுப்பினாள்

இதமான விரல்களினால்
கன்னம் வருடினாள்,
உள்ளங்கை கதகதப்பில்
பொழுது புலர்ந்தது

முற்றத்தில்,
தேகத் திரை நீக்கி நிக்க,
மேகத் திரை விலக்கி
அதிகாலை சூரியன் தன்
செந்தூர கரங்கள் நீட்டி
தேகம் தீண்டியது,
அகம் அலர்ந்தது

பூமி விரித்த
மரகத கம்பளத்தில்
பூத்திருந்த காலை பனி
காலை நனைத்தது,
மெல்லிய காற்று
என்மேல் வீச
அங்கம் எல்லாம் குளிர, 
அந்நாளின் முதல் உபசரிப்பு
இனிமையாய் அமைந்தது...

...

உள்ளத்தில் இனிப்பவள் - 
இறைவன் தீட்டியதில்
எழில்மிகு ஓவியம் 
வண்ணம் கொண்டு வர
ஈரம் காயாத நெற்றியில்
குங்குமம் இட்டேன்

Monday, April 12, 2010

மலையும் மலை சார்ந்த இடமும்

தேகத்தில்
பசுமை போர்த்திய
மலைமகள், தன்
வளமை விளங்க
மேகத்தில்
நனைந்து நின்றாள்

ஆடை விலகிய
வனங்களில்,
துளிர்த்த நீர்த்துளிகள்
அருவியென விழுந்து
மேனியில்,
ஓடையென ஓடியது

தலைமகன்,
கதிரவன் தன்
மோகத்தில் முளைத்த
ஆயிரம் கிரணங்கள்
அனைத்தும் கொண்டு
அணைத்து கொண்டான்

பூ மனம் மலர்ந்தது
நறுமணம் கமழ்ந்தது
தளிருடல் சிலிர்த்தது
இன்னிசை இசைத்தது
உள்ளுயிர் விழித்தது

நித்ய புதியவர்கள்
அனுதினமும் அன்பு
செய்யும் குறிஞ்சி

Wednesday, February 17, 2010

சொர்க்கத்தில்

முன்னிரவு பொழுதில்,
சன்னல் திறந்து,
மேஜையில்
வெண்பட்டு பரப்பி,
விளக்கு ஏற்றி,
இரு குவளையில்
இளஞ்சூட்டில் தேனீர் வைத்து,
எதிரெதிர் நாற்காலி
ஒன்றில் நான்
மற்றொன்றில் - உன்னிடத்தில்
படர்ந்தது வான் நிலவொளி

நிலவின் மகள்
உனக்காய், உன்னுடன்
பழகிய பேரின்ப
தருணங்கள் நினைந்து
அக மலர்ந்து

காத்திருக்கிறேன்...

நாற்காலியில்
வெண் ஒளி, ஒளிந்து
ஒளிந்து ஒளிர்ந்தது
மேகம் பல
நிலவு மறைத்து போக,
கடிகார முள்ளும்
மெல்ல நகர்ந்தது

காத்திருக்கிறேன்...

சன்னல் வழி
குளிர் காற்று,
தோட்டத்து மலர்
மணம் கொண்டு
இதமாய் வீசியது,
பூ வாசம் மணக்க
குளிரும் மேல் பரவியது

காத்திருக்கிறேன்...

என்னவள் நீ,
என் காதில் உன்
காதல் வாசித்தாய்,
வாசித்த கவிதை
அதை அசை போட அது -
தேங்கிய இதயக்குளத்தில் கல்லெறிந்து
ஏக்க அலைகளை எழுப்பியது

காத்திருக்கிறேன்...

எனை பிரிந்து
சொர்க்கம் சென்றாயே...
என் காதல் தேவதை
உனக்காக நானும்
சொர்க்கத்தில் காத்திருக்கிறேன்,
நின் நினைவென்னும் சொர்கத்திலேயே
சதா காத்திருக்கிறேன்...

சொர்க்கத்தில்
மறுபடியும் உனை சேர...